ஆனந்த வாழ்வருளும் அதிசய ஆஞ்சிநேயர்கள்

 ஆனந்த வாழ்வருளும்  அதிசய  ஆஞ்சிநேயர்கள்

மேலபாதி இரட்டை ஆஞ்சநேயர்

மேலபாதி ஆலயத்தில் இரட்டை ஆஞ்சநேயர்:

 அனைத்து ஆலயத்திலும் ஒரு மூலவர் மற்றும் ஒரு உற்சவர் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் ஒரே தெய்வம் இரட்டையராக இருப்பது மிகவும் அரிது. இவ்வாறாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலபாதி என்ற ஊரில் இரட்டை ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

 இத்தலத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயரை வழிப்பட்டால் எப்பேற்பட்ட இன்னலும் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

 மேலும், இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மற்றும் சனி தோஷம், ராகு - கேது போன்ற தோஷங்கள் விலகும்.

 இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைப் பணியைத் துவக்குவதற்கு முன் இவ்வாலயத்திற்கு வந்து இரட்டை ஆஞ்சநேயரைக் வணங்குவார்கள். பிறகுதான் தங்களுடைய பணிகளை ஆரம்பிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருத்தலம்.

கையில் வீணை ஏந்தி காட்சி தரும் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் கையில் வீணை ஏந்தி காட்சி தரும் கோவில்:

கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் பெரிய கடைத்தெருவிற்கு போகும் வழியில் ராமசாமி கோவில் அமைந்திருக்கிறது

நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், இந்தக் கோவிலை கட்டி எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார். ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறார். சத்ருக்கணன் சாமரம் வீசுகிறார். லட்சுமணன், வில் ஏந்திய நிலையில் ராமனின் கட்டளைக்காக காத்திருக்கிறார்

ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் வீணை ஏந்தி, ராமாயணத்தை பாராயணம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார். விஸ்வாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன

கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.


கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்:

 தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மகாலட்சுமிக்கு உண்டானது. இதையடுத்து அவர் தவம் இருந்து நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்ட தலம் இதுவாகும். நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து திருமாலின் அனுக்கிரகம் பெற்ற சாளக்கிராம கல்லை எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார்.

 இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார். சாளக்கிராம கல்லை கீழே வைக்கக்கூடாது என்று யோசித்த ஆஞ்சநேயர், அங்கு தவம் செய்து கொண்டிருந்த திருமகளிடம் அந்த கல்லைக் கொடுத்து விட்டு நீராடச் சென்றார்.

 ஆஞ்சநேயர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததால், சாளக்கிராமக் கல்லை கீழே வைத்தாள் திருமகள். அந்த கல்லே, மிகப்பெரிய மலையாக உருவானதாகவும், மலை மீது நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் காட்சி அளித்ததாகவும் தல வரலாறு சொல்கிறது.

சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன், நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கருத்துகள்